இன்று திருக்கோவில் ஆடிமகோற்சவதிருவிழாவில் கல்விச்சாதனையாளர் 12பேர் பாராட்டிக்கௌரவிப்பு!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற

 திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் ஆடிஅமாவாசை மகோற்சவ இறுதிநாள் திருவிழாவில் கல்விச்சாதனையாளர்கள் பன்னிரெண்டு பேர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
கடந்த 17தினங்களாக நடைபெற்றுவந்த ஆடிஅமாவாசை மகோற்சவத்திருவிழாக்களின் இறுதிநாள் திருவிழா இன்று (22)சனிக்கிழமை இரவு நடைபெறும்.
அச்சமயம் மூன்றாவது வருடமாக நடைபெறும் கல்விச்சாதனையாளர் பாராட்டுவிழா ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் ஆலயமுன்றலில் பகிரங்கமாக நடைபெறவிருக்கிறது. திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கடந்தவருடம் க.பொ.த. சாத பரீட்சைக்குத்தோற்றி 9ஏ சித்திகளைப்பெற்ற ஆறு (06)சாதனைமாணவர்களும் க.பொ.த.உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 3ஏ சித்திகளைப்பெற்ற ஆறு (06) சாதனைமாணவர்களும் பரிசுவழங்கி பகிரங்கமாகப் பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர்.
 பரிசுகளுக்கான அனுசரணையை கடந்த 3வருடங்களாக திருக்கோவில் மக்கள்வங்கிக்கிளை வழங்கிவருகின்றது. திருக்கோவில் மக்கள்வங்கி முகாமையாளர் அப்துல்கபூர் நிசாம் முன்னின்று வருடாந்தம் இந்நிதிஉதவியை நல்கிவருகின்றமை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
 கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழாவிற்கு அதிதிகளாக கிழக்குமாகாண காணி வீதிஅபிவிருத்தி மகளிர்விவகார அமைச்சர் ஆரியவதிகலப்பதி ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ,திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் மக்கள்வங்கிமுகாமையாளர் ஏ.ஜி.நிசாம், திருக்கோவில் பொலிஸ்நிலைப்பொறுப்பதிகாரி பண்டார ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
 பாராட்டுப்பெறும் கல்விச்சாதனையாளர்கள்: 9ஏ பெற்ற க.பொ.த.சாத கல்விச்சாதனையாளர்கள்: 1. கணேசமூர்த்தி ரதிஸ்ஷனா – தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 2.கிருஸ்ணபிள்ளை சகிதன் – தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 3.நற்குணராஜா ஹேமகாந்த்- தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 4.ரவீந்திரராஜா ஆரவி – தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 5.ரவிச்சந்திரன் பிறீத்தி –திருக்கோவில் மெ.மி.த.க.பாடசாலை 6.தவராஜா ஜலக்ஷா – கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம். 3ஏ பெற்ற க.பொ.த.உயர்தர கல்விச்சாதனையாளர்கள்: 1. தம்பிப்பிள்ளை நாவேந்தன் – பொறியியல்துறை- அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரி 2.தணிகாசலம் வினுராஜ் – மருத்துவத்துறை- அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரி 3.;ஆறுமுகம் ஜெகன்- வர்த்தகத்துறை – தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 4.அமிர்தராஜா லோகிதன் – கலைத்துறை- தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி 5.விஜயராசா பிதுர்சினி – வர்த்தகத்துறை- கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம். 6.சர்வானந்தம் தர்சனா – கலைத்துறை- கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம்.
கடந்த 2015இல் இவ்விதம் 3கல்விச்சாதனையாளர்களும் 2016இல் 8கல்விச்சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வருடம் 12மாணவர்களாக இச்சாதனைமாணவர்தொகை அதிகரித்திருக்கின்றமை குறித்து கல்வியியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்ற அதேவேளை இவ்வதிகரிப்பிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள்மத்தியில் பகிரங்கமாக நடைபெறும் இப்பாராட்டுவிழாவும் ஒரு காரணியாகவிருக்கலாமெனவும் தெரிவித்தனர். இதேவேளை நாளை மறுதினம்(23) ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் வருடாந்த பிதிர்க்கடன் செலுத்தும் ஆடிஅமாவாசைத் தீர்த்தோற்சவம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.