உலக அரங்க விழாவில் “பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி”..

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் உலக நாடக அரங்க விழாவில் திரு. விமல்ராஜ் அவர்களின் தயாரிப்பு நெறியாட்கையில் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி – நாடகம்

– உலக அரங்க விழா – 2017 –
– 02.04.2017 மாலை 05.00 மணி –
– சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், கல்லடி –

அனைவரையும் அழைக்கின்றோம் ……….

” பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி “ யின் படைப்பாளி பேசுகின்றான்……

என்னை மிகவும் பாதித்த ஒரு கதை இது. இக்கதையால் மிகவும் கவரப்பட்டு இக்கதையை குறும்படமாக எடுப்பதற்கு முயன்றபோது சில அரசியல் காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து இக்கதையை ஒரு முழு நீள சினிமாவாக உருவாக்குவதற்கான பிரதியையும் உருவாக்கி இருக்கின்றேன்.

இந்த வேளையில்தான் நாடகம் ஒன்றை உருவாக்குவதற்கான தேவைப்பாடு உருவாகியது. அப்பொழுதுதான் இக்கதையை நாடகமாகவும் உருவாக்கி இருக்கின்றேன். இக்கதையின் மூலம் கௌரிபாலன் 1994ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகைக்கு எழுதிய ‘நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்’ என்கின்ற சிறுகதை. அக்கதையை மையமாகக் கொண்டு கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு, பயிற்சிப்பட்டறையின் மூலம் இக்கதையை நாடகமாக உருவாக்கி மேடையேற்றி இருந்தார்.

அனைத்து பல்கலைக்கழகங்களின் நாடகப்போட்டியில் அந்நாடகம் பங்குபற்றி முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. அப்பொழுது இந்நாடகம் ஆங்கிலத்தில் ஆற்றுகை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலும் இந்நாடகம் மேடையேற்றப்பட்டு இருந்தது.

பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி என்கின்ற இந்நாடகத்தை யதார்த்த நாடகப் பாணியை அடிப்படையாகக் கொண்டு இப்பொழுது இந்நாடகத்தை வடிவமைத்திருக்கின்றோம். முன்னர் வடிவமைக்கப்பட்ட நாடக வடிவத்தில் இருந்து பல மாற்றங்களை நாங்கள் செய்து இந்நாடகத்தை உருவாக்கி இருக்கின்றோம். கதைக்காகவும், பயிற்சிக்காகவும், நாடக உருவாக்கத்திற்காகவும், அதன் அழகியலுக்காகவும் பல நாட்கள் உழைத்திருக்கின்றோம். தமிழ் நாடகப் பரப்பில் இந்நாடகம் மிக முக்கியமாக பேசப்படும் என்பது திண்ணம்.

இந்நாடகத்தின் பேசு பொருள்:
இன்று எம்மக்கள் மத்தில் பேசப்பட வேண்டிய மிக முக்கியமான உரையாடலுக்கு உரிய ஒன்றாகும். எங்கள் பிள்ளைகளை, எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்க முற்படுகின்றோம். அவர்களை அவர்கள் திறனுக்கு ஏற்ப உருவாக்கத் தவறி விடுகின்றோம். இதை இந்நாடகம் மிக ஆழமாக பேசுகின்றது. எங்கள் குடும்பங்களையும், சமூகத்தையும், அரசியல் சூழலையும், நீதித் துறையையும் பல கேள்விக்கு உட்படுத்துவதாகவும் அமைகின்றது. இந் நாடகம் ஆற்றுகையுடன் முடிந்து விடும் ஒன்று அல்ல, அதன் பின்னரான பல விவாதங்களுக்கும் வழிசமைக்கும்.