எதிர்பார்ப்பு தவிடுபொடி; 4 வருட சிறை; 10 வருடம் அரசியலுக்கு தடை

சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 இலட்சத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியயோர் குற்றவாளிகள் என உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் சசிகலா, முதல்வர் பதவிக்கான தகுதியை இழந்துள்ளமை தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய மூவரும் நான்கு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் செலுத்துமாறும் உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம், சசிகலாவின் சிறைத் தண்டனையான 4 வருடங்கள் முடிந்து மேலும் 6 வருடங்களுக்கு தேர்தலில் பங்குபற்றவோ, பொது அலுவலகம் அமைக்கவோ முடியாது என்பதோடு, எவ்விதமான பொது பதவிகளையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லுபடியாகும் என உச்சநீதின்றம் அறிவித்துள்ளது.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் தொடரப்பட்ட,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த 2015 யூன் 23ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2015 பெப்ரவரி 23 முதல் தொடங்கி இறுதி வாதம் ஜூன் 7 வரை நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது