கதிர்காமம் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை, முருகன் கோயில் வீதியை சேர்ந்த கணேசன் யசோராஜ் (வயது 26) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் இருந்து கதிர்காமத்திற்கு செல்வதற்காக மஹியங்கனை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாலை மூன்று மணியளவில் இளைப்பாறுவதற்காக மஹியங்கனை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் நீராடியுள்ளார்.இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்தமையாலும் நீரோட்ட வேகம் அதிகரித்ததாலும் குறித்த இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் நேற்று(26) காலை கண்டெடுக்கப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள கால்வாய் பகுதியில் “நீரில் இறங்க வேண்டாம்”எனும் அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.