காரைதீவு காளிகோவில் நள்ளிரவில் தகர்ப்பு! மூன்று கதவுகள் உடைப்பு! அம்மனின் சக்தியால் களவாடிய அத்தனையையும் விட்டுவிட்டு தப்பியோட்டம்!

(காரைதீவு சகா)

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம் நட்டநடுநிசியில் தகர்க்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப்பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் மூலஸ்தானத்தின் முன்னாலுள்ள மூன்று பாரிய கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த பாரிய இரும்புப்பட்டங்கள் பூட்டுகள் யாவும் தகர்க்கப்பட்டுள்ளன.
உள்ளேயிருந்த உண்டியல் வெளியே கொணரப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதிநேரத்தில் காளி அம்பாளின் அருட்சக்தி காரணமாக களவாடிய அத்தனை பொருட்களையும் பணத்தினையும் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உடைக்கபட்ட உண்டியல் ஆலய பிரகாரத்திலே திறந்தவாறு கிடந்தது. மதிலுக்குவெளியே உண்டியலில் உள்ளிருந்த பணம் அப்படியே கொட்ப்பட்டுக்கிடந்தது.
அம்மனின் தங்கநகைகள் வைத்த இடத்திலேயே இருந்தது. அதற்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.

இன்றுகாலை 6மணியளவில் சம்மாந்துறைப்பொலிசார் ஆலயத்திற்கு விஜயம்செய்து சம்பவ இடத்தைப்பார்வையிட்டனர்.

இச்சம்பவம் பற்றி இன்று வியாழக்கிழமை சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பரிபாலனசபையினர் சம்பவம் பற்றி முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

சம்பவநேரம் காவலாளியான இராமன் கிருஸ்ணபிள்ளை ஆலயத்தில் இருந்துள்ளார். அவருகே இருவர் நின்றதால் அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என்று வாக்குமூலத்தில் ஆலய பரிபாலனசபைத்தலைவர் கலாபூசணம் வித்தகர் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தலைவர் இராமநாதன் கதவு உடைக்கப்பட்ட இடத்தைக்காட்டி சம்பவம் பற்றி எமது நிருபரிடம் விபரித்தார்.
அவர் விபரிக்கையில்:

எமது ஆலய 25வருடகால வரலாற்றில் இப்படி கதவுகள் தகர்க்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது இதுவே முதற்றடவையாகும். எனினும் அம்பாளின் அருட்சக்தி அவர்களை அந்த இடத்திலேயே சகலவற்றையும் விட்டுவிட்டு ஓடவைத்தது.
இதனை காவலாளி கண்டிருக்கின்றார்.

எமது காளி அம்பாள் பேசம் தெய்வம். சாதாரணமானவர்கள் அவரருகே செல்வதென்பது சாமானியமான காரியமல்ல. அவர் தீப்பிழம்பாக காட்சியளிப்பாள்.

சுனாமியின்போது அம்மனின் பட்டில் சுற்றிவைக்கப்பட்டிருந்த தங்கநகைகள் காணாமல் போயிருந்தன. இருந்தும் ஒருசில நாட்களில் எனது கனவில் தோன்றி இந்த இடத்தில் அந்த நகைகள் புதைக்கப்பட்டுள்ளது. அற்கே போய் எடுங்கள் என அம்பாள் சொன்னார். அதன்படி மறுநாள் காலை அங்கு சென்றபார்த்தபோது ஆச்சரியம் தங்கநகைகள் அந்த இடத்திலேயே இருந்தன.

அதே 25வருடகால பட்டிலேதான் இன்றும் அந்த தங்கநகைகள் உள்ளன. இதோ பாருங்கள் என அவற்றைக்காட்டுகின்றார்.

இதற்கு முன்னர் 2006இல் ஒரு தடவை இங்குள்ள ஒலிபெருக்கியின் அம்ளிபயர் காணாமல் போனது. அதனைக்கொண்டு சென்றவர் ஒருவாரகாலத்துள் அதற்கான பணத்தை கொண்டுவந்து ஆலய படியில் வைத்துவிட்டுச்சென்றார்.

மற்றுமொரு தடவை அம்பாளின் கலசத்தைத் திருடிய ஒருவர் மறுநாளே விபத்துக்குள்ளாகி 3மாதகாலம் அவஸ்தைப்பட்டார்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஆலயத்திலிருந்த
வெண்பலப்பொருட்கள் சில காணாமல் போயின. அவற்றை சைக்கிளில் அவர் கொண்டுசென்றபோது தேங்காய் வீழ்ந்து அவராது கை உடைந்தது.

இவ்வாறு அம்மனின் சக்தி அபரிமிதமானது. இம்முறையும் அது நடக்கும். ஏலவே காட்டியிருக்கிறார். இருந்தும் சம்பந்தப்பட்டோரை விரைவில் காட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.