கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய முதல்வர் நேற்று உத்தியோக பூர்வமாக கடமைகளை பெறுப்பேற்றார்!

அம்பாறை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு நேற்று(06) உத்தியோக பூர்வமாக கடமைகளை பெறுப்பேற்றார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு கல்வி அமைச்சர் அவர்களினால் நியமனத்தினை பொறுப்பேற்ற அருட்சகோதரரை நேற்று கல்லூரி சமூகம், மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் போன்னையா ஜோசப், மாகாணத்திற்கு பொறுப்பான அருட்சகோதரர் மற்றும் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் அப்துல் ஜலீல், கோட்டக்கல்வி அதிகாரி, அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் புதிய அதிபரை வேன்ட் வாத்தியத்துடன் வரவேற்று மாலை அணிவித்து கௌரவித்தனர்.

இங்கு புதிய முதல்வர் கருத்துரைக்கையில் இங்கு எனக்கு முன்னால் கடமையாற்றிய அதிபர்களினதும், ஆசிரியரிகளினதும் அயராத உழைப்பின் பயனே இந்தக்கல்லூரி இன்று பெயர் பெற்று விளங்குகின்றது இதனை இன்னும் உயர்த்துவதற்கு இங்குள்ள அனைவரும் எனக்கு பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.

நான் ஒருவன் மாத்திரம் தனித்து நின்று மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியாது நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிப்பினை செய்வோம் என்ற உறுதியினை மனதில் கொண்டு செயற்படுவோம் எனவும் கூறினார்.