கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்புத் திருவிழாவான தேரோட்டத்திருவிழா இன்று மாலை வசந்த மண்டப பூஜைகளின் பின் பிள்ளையார் மற்றும் சிவன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வடம் பிடித்தால் வாழ்வு சிறக்குமென்ற முதுமொழிக்கேற்ப ரதத்திற்கு பிராயச் சித்த பூஜைகளின் பின் ஆலயப் பிரதமகுரு வழிகாட்டலின் கீழ் 1000க்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

விநாயகப் பெருமானின் ரதம் முதலிலும் அதனைத் தொடர்ந்து தான்தோன்றீஸ்வரர் அப்பனின் ரதம் பின்பும் ஆலய வெளிவீதியில் பக்திபூர்வமாக ரதோற்சவம் இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலைப் பதியினிலே நந்தி புல்லுண்டு நெடிய கொடி மரமுண்டு என புதுமைத் தேரோடும் தலமாம் இத்தலத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா 24.08.2017ந்திகதி அதிகாலை திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் வருடாந்த உற்சவக் கிரிஜைகள் யாவும் இடம்பெற்றது. இன்றைய தினம் இவ்வாலயத்தின் இறுதித் திருவிழாவான திருவேட்டைத் திருவிழா இன்று இரவு முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய முன்றலில் .இடம்பெற்றது.

நாளைக் காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை திருக்கல்யாணம் பொன்னூஞ்சல் கொடியிறக்கம் சண்டேஸ்வரர் உற்சவம் என்பன இடம்பெற்று ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.ஆலய வண்ணக்கர் பு.சுரேந்திர ராஜா தலைமையில் திருவிழா ஒழுங்குகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது