சம்மாந்துறை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயம் தோன்றிய வரலாறு

கிழக்கிலங்கையின் சம்மாந்துறையில் மிகவும் பழமை வாய்ந்த மட்டக்களப்பு தரவை – 2 ல் அமையப்பெற்ற கோரக்கர் பிள்ளையார் ஆலய எல்லைக்குள் தானாகத்  தோன்றி அகோரமாரியம்மன் மக்களுக்கு அருள் புரிகின்றார்.
சொறிக்கல்முனையில் வசித்துவரும் கிறிஸ்தவராகிய பூராசி என்பவரின் கனவில்  தோன்றிய அம்பாள் தான் சம்மாந்துறையில் கோரக்கர் கோயில் எலலைக்குள் நிலத்தின் கீழ்  குடிகொண்டிருப்பதாகவும் , தன்னை வெளியில் எடுத்து கொடுக்கும் படியும்  கூறித்தான் குடிகொண்டிருந்த எல்லையை மிகவும் தெளிவாகவும் காட்டியுள்ளார்.
சொறிக்கல்முனையை சேர்ந்த அந்த நபர் கோரக்கர் ஆலயபரிபால​ன சபையினரிடம் விபரத்தினை தெளிவாக கூறினார் சிலர் வியப்படைந்தனர் இன்னும் சிலர் ஏழனம் செய்து சிரித்தனர் இதைக்கண்ட  கிறிஸ்தவ ந​ப​ர் நான்சொல்லுவது உண்மை என்றும் இது தெய்வத்தின் கட்டளை என்றும் சத்தியம் செய்தார். இவ் விடையத்தை நோக்கிய பரிபாலன சபையினர் அவர் சொல்வதை செய்துதான் பார்போம் என்று கூறினர். இதற்கு யாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பரிபாலன சபைத்தலைவர் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.
சரி எப்போது அகழ்வது என​ பலர் கேட்டனர். நாளை இர​வு என்று முடிவு செய்யப்பட்டது. இது இப்படி இருக்க இச்செய்தி எப்படியோ பொலிசாருக்கு தெரிந்துள்ளது. இவர்கள் புதையல் அகழ்வதாக எண்ணி பரிபாலன சபையினரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். சபையினரும் உண்மையான விபரத்தை கூறியுள்ளனர். சந்தேகம் கொண்ட பொலிசார் நிலத்தை அகழும்படி கூறி இரண்டு பொலிசாரை அவ்விடத்தில் விட்டுசென்றுள்ளனர். 1996 ம் ஆண்டு திருவெம்பாவை 9ம் நாள் அதாவது 1996.12.24 ம் திகதி செவ்வாய்க் கிழமை 07.00 மணிக்கு அந்நபர் குறிப்பிட்ட இடத்த்தில் ‘மஞ்சோனா மரம்” ஒன்றை வெட்டி வீழ்தி அதன் வேர்களையெல்லாம் அகற்றி சுமார் ஆறடி (06) ஆழத்திற்கு மேல் அகழ்ந்தவர்கள் சோர்ந்து போய்விட ஒரு சிலர் இதைக்கண்டு ஏழனம் கேலியும் செய்துள்ளனர். இவர்களுக்குள் இருந்த இரண்டு; நபர்கள் மாத்திரம் சளைக்காமல் தமது தெய்வ பணியைத் தொடர்ந்துள்ளனர்.
என்ன அதிசயம் சுமார் ஏழடிக்கு(07) மேல் அகழ்ந்ததும் அவர்களின் கண்களில் ஒளிச்சுடர் ஒன்று பிரகாசித்த வண்ணம்​ கறுப்பு நிறம் கொண்ட​ மாரியம்மன் சிலை சரியாக​ 1.05 மணிக்குத் தென்பட்டுள்ளது இச்சிலையைக் கண்ட​ இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இச்சிலையையும் இதன் அகோரப்பார்வையையும் கண்ட​ மக்கள் “அரோகரா,அரோகரா​” என்ற​ நாமத்துடன் கதறி அழுதுள்ளனர். அதன்பின்பு பூசகர்களினால் அச்சிலையைத் தூய​ பட்டுக்களால் மூடி வெளியே எடுத்து அச்சிலையை வேப்பமரத்தடியில் வைத்து பந்தலிட்டு பூஜை செய்து வந்தனர்.
அதே கிறிஸ்தவரின் கனவில் மீண்டும் தோன்றிய​ அம்பாள் தன்னை எடுத்த இடத்தில் வைத்து ஆலயம் அமைக்குமாறு பணித்ததால் அதை அன்றைய​ பரிபாலன​ சபையினரும் நிறைவேற்றினர் இவ்வாறு அமையப்பெற்று மக்களுக்கு அருள் பாலித்து வருகின்ற​ திருத்தலமே இந்த​ அகோரமாரியம்மன் ஆலயமாகும்.