சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனனதினம் இன்று! இலங்கையிலும் வெளிநாடுகளில் சிறப்பு நிகழ்வுகள்

அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 125வது ஜனனவருட கால்கோள் விழா இன்று காலை 9 மணியளவில் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் ஆத்மீக அதிதிகளாக ஸ்ரீ;மத் சுவாமி சர்வருபாநந்தாஜி மஹராஜ் (தலைவர் இராமகிருஷ்ண மிஷன் இலங்கை) ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமாநந்தாஜி மஹராஜ் (பொறுப்பாளர் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்) ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

கௌரவ அதிதிகளாக ஏ.கே. கோடீஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர் அம்பாறை) த..கலையரசன் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) மு.இராஜேஸ்வரன் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) இரா.துரைரெட்ணம் (கிழக்குமாகாணசபை உறுப்பினர்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

விழா மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதலாம் கட்ட நிகழ்வுகளாக கொடியேற்றம் இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் துறவறக்கீதம் சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லத்தில் பூசைசுவாமி விபுலாநந்தரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும், ஜனனதின திருவுருவப்படம் அறிமுக நிகழ்வு சிறப்புரை மகிழ்வுரை என்பன இடம்பெறும்.

 

இரண்டாம் கட்ட நிகழ்வாக காரைதீவு விபுலாநந்த சதுக்கத்திலுள்ள சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலியும் மூன்றாம் கட்ட நிகழ்வாக சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் பொது இடங்களிலும், வீடுகளிலும் பிரதிஸ்டை செய்யும் ஆரம்ப நிகழ்வும் இடம்பெறும் என சங்கச்செயயலாளர் கே.ஜெயராஜி தெரிவித்தார்.

 

இதேவேளை ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 125வது ஜனனதினத்தினை கொண்டாட உலகமெங்கும் பல அமைப்புகள் தயாராகி வருகின்றன.

 

சுவாமி விபுலானந்த அடிகளார் 1892.03.27ஆம் திகதி மட்டக்களப்பு காரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்து சைவத்திற்கும் தமிழிற்கும் அருந்தொண்டாற்றி முத்தமிழுக்கு அணிசேர்த்து 1947.07.19ஆம் திகதி இறைபதமடைந்தார்.

 

அடிகளார் இவ்அவனியில் அவதரித்து இன்றுடன் 225 வருடங்களாகின்றன.

 

அதனையொட்டி அவர் சார்ந்த சில அமைப்புகள் இன்றைய ஜனனதின விழாவைக் கொண்டாட தயாராகி வருகின்றன.

 

இலங்கையில் மட்டுமல்ல கனடா லண்டன் பிரான்ஸ் அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

 

அவர் நாமம் தாங்கிய அமைப்புகள் ஏலவே பல நிகழ்ச்சிகளை நடாத்த ஆரம்பித்துள்ளன. உதாரணமாக காரைதீவு விபுலானந்த சனசமுக நிலையத்தினர் வாமியின் 125வது ஜனனதினத்தையொட்டி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியை நடாத்தியுள்ளது.

 

சைவமும் தமிழும் என்ற விவாதப் போட்டி இன்று சனசமுக நிலையத்தில் பாடசாலை மாணவர்களை மையமாகவைத்து நடாத்தவுள்ளது என நிலையச்செயலாளர் ஏ.பிரேமானந்த் தெரிவித்தார்.

 

தடாகம் கலை இலக்கியவட்டத்தினர் உலகம்தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியை இம்மாதம் நடாத்தி வருகின்றது .87வது மாதமாக நடாத்திவரும் மாதாந்த கவிதைப் போட்டியில் இம்மாதத்திற்குரிய தலைப்பாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் என்பதாகும். இதற்கான பரிசினை அவுஸ்திரேலியாவில் வாழும் பேராசிரியர் ஜெய்சர்மா வழங்கவுள்ளார் என தடாகம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா தெரிவித்தார்.

 

இந்நிலையில் அவர்பிறந்த காரைதீவு மண்ணில் அவர் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட விபுலானந்த ஞாகார்த்தப் பணிமன்றத்தினர் வருடம் பூராக ஜனன வருட நிகழ்வைக் கொண்டாட விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 

இதேவேளை சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை கட்டுரை கவிதைப் போட்டிகளை நடாத்தி வருகின்றது.

 

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் திறந்தபோட்டி மட்டத்திலும் மற்றும் சர்வதேச மட்டத்திலும் நடாத்தவுள்ள இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் மேற்படி சபையால் கோரப்பட்டுள்ளது.

 

கனடா சுவாமி விபுலானந்த கலை மன்றத்தினர் பாரிய மலரொன்றை வெளியிடுவதற்கும் சங்கத்தலைவர் கே.ஏரம்பமூர்த்தி தலைமையில் பாரிய விழாவொன்றை நடாத்துவதற்கும் தயாராகிவருவதாக சங்க செயலாளர் நித்தி சிவானந்தராஜா தெரிவித்தார்.

 

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவதார புருஷர் சாதாரண மக்களும் தமிழ், ஆங்கிலம், ஆகிய இருமொழிக் கல்வியைப் பெறவேண்டுமென்பதற்காக பாடசாலைகளை நிறுவி கிழக்கிலங்கையிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வியாளர், சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த சமூக சிந்தனையாளர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தராவார்.

 

சுவாமியின் 125 ஆவது பிறந்தநாள் விழாவை இவ்வாண்டு ஜுலை மாதம் தமது மன்றம் மிகச் சிறப்பாகக்கொண்டாடத் தீர்மானித்துள்ளது. இவ்விழாவிலே சுவாமியின் பன்முக ஆளுமைகளையும் அவரது பல்வேறுபட்ட பணிகளையும் உள்ளடக்கிய ஆய்வுக்கட்டுரைகள் தாங்கிய சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவுள்ளதாக செயலாளர் நித்தி சிவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.