டோனியின் அதிரடி, தமிழக வீரரின் சுழலில் சுருண்டது மும்பாய் – IPL இறுதியில் புனே…!

10 வது IPL போட்டி தொடரின் இறுதி போட்டிக்கு தேர்வாகும் முதல் அணியை தேர்வு செய்யும் முதலாவது Play Off போட்டி மும்பாயில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியும் போட்டியிட்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பு முடிவை அறிவித்தார், இரு அணிகளுக்குமிடையிலான குழுநிலைப் போட்டிகள் இரண்டிலும் மும்பாய் அணி தோல்வியை தழுவிய நிலையில் இன்றைய போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

14.5 கோடிக்கு IPL ஏலத்தில் பெறப்பட்ட பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாத நிலையில், போட்டியில் முதலில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப வீரர் த்ருப்பதி மற்றும் அணித்தலைவர் ஸ்மித் ஆகியோர் ஒற்றை ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஆயினும் ரஹானே 56 ஓட்டங்களையும், மனோஜ் திவாரி 58 ஓடடங்களையும், டோனி ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் ஐந்து 6 ஓட்டம் அடங்கலாக 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதி 2 ஓவர்களில் மட்டும் டோனியின் அதிரடியில் புனே அணி 41 ஓட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் மக்லினகன், மாலிங்க, மற்றும் கரன் சர்மா தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பலமான துடுப்பாட்ட வரிசையுடன் சொந்த மண்ணில் களமாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு தமிழகத்தின் 17 வயதான சுழல் பந்து வீச்சாளர் வோசிங்டன் சுந்தர் (4-16-3-4.00) அதிர்ச்சி கொடுத்தார்.

முதல்நிலை துடுப்பாட்ட வீரர்கள் மூவர் ஆட்டம் இழக்க செய்த நிலையில், தடுமாறிய மும்பாய் அணிக்கு பார்த்திப் பட்டேல் அரைசதமடித்து தெம்பூட்டினார்.

ஆயினும் மற்றைய வீரர்கள் சரியான ஒத்துழைப்பை வழங்காத நிலையில் மும்பாய் அணி 20 ஓட்டங்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த IPL தொடரில் இன்றைய போட்டி அடங்கலாக மும்பாய் அணி மூன்றாவது தடவையாகவும் புனே அணியிடம் மண்டியிட்டது.

10 வது IPL தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் அணி எனும் பெருமையை ஸ்மித் தலைமையிலான புனே அணி பெற்றுக்கொண்டது. IPL சரித்திரத்தில் 7 வது இறுதிப்போட்டியில் டோனி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய (16 மே) போட்டியில் தோல்வியை தழுவிய மும்பாய் அணி, கொல்கொத்தா மற்றும் சான் ரைசேர்ஸ் அணிகளுக்கிடையேயான இன்றைய (17 மே) வெளியேற்றும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மீளவும் மோதவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 21 ம் திகதி இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.