தகவல் தொழிநுட்பமூடாக புரட்சிகர சேவையை அறிமுகப்படுத்தியது கிழக்குப் பல்கலைக்கழக நூலகம்!

கல்விசார் நூலகங்கள் தகவல் தேடுனர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக புதுப்புதுச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் சமகாலத்தில், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் இயங்கும், வந்தாறுமூலை பிரதான நூலகம், மட்டக்களப்பிலுள்ள சௌக்கிய, பராமரிப்பு பீடத்திற்கான கிளை நூலகம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நூலகம் மற்றும் திருகோணமலை வளாக நூலகம் ஆகியவற்றில் காணப்படும் வாசகர்களுக்கான ஆவணங்களனைத்தையும் ஒரே பார்வையில் கணணித்திரையில் அவதானிக்கக்கூடியவகையில் ‘EUfind Union Catalogue’  எனும் இணைந்த பட்டிலாக்க அமைப்பொன்றைக் கிழக்குப் பல்கலைக்கழக நூலகமானது, இலங்கைப் பல்கலைக்கழக நூலக வரலாற்றில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தகரீதியிலானதும், சுயாதீனமானதுமான வெவ்வேறுவகை கணணி மென்பொருட்களின் செயற்படுநிலையில் காணப்படும், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழியங்கும் மேற்படி நான்கு நூலகங்களதும் புத்தகங்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள், செயற்றிட்ட அறிக்கைகள் போன்றவற்றின் புத்தக விபர அட்டவணைகள் இக்கணணிமயப்படுத்தப்பட்ட இணைந்த பட்டியலாக்க அமைப்பின்மூலம் ஒரே மென்பொருளின்கீழ் விரைவான தேடுதலுக்காக ஒழுங்கமைத்திருப்பது இதன் மிகச் சிறப்பம்சமாகும்.
இலங்கையின் ஏனைய ஒருசில நூலகங்கள் தமது கிளை நூலகங்களிலுள்ள புத்தகங்களைத் தனியாகவோ அல்லது சஞ்சிகைகளைத் தனியாகவோ அல்லது ஆய்வு நூல்களைத் தனியாகவோ ஏற்கனவே இவ்வாறான இணைந்த பட்டியாக்க முறைமையின்கீழ் கணணிமயப்படுத்தியிருப்பினும், கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது, மேற்படி சகல ஆவணங்களையும் ஒரே திரையின்கீழ் வடிவமைத்திருப்பதுடன் கிழக்குப் பல்கலைக்கழக நூலக முறைமைப் பகுப்பாய்வாளர் (Systems Analyst) எம். ஜெயகானந்தன் இக்கணணி வடிவமைப்பினை VUfind மென்பொருளின்மூலம் சிறப்பாக உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாரத் தொடக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதி உபவேந்தர் டாக்டர் கே.ஈ.கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார். கிழக்குப் பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையப் பணிப்பாளர் மற்றும் நூலக அதிகாரக்குழு அங்கத்தவர்கள், நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்வில், நூலகர் திருமதி தவமணிதேவி அருள்நந்தி அறிமுக உரையாற்ற, இவ்வமைப்பினை வடிவமைத்த எம்.ஜெயகானந்தன்; செயற்பாட்டமைப்பினை விளக்க, சிரேஸ்ட உதவி நூலகர் திருமதி காயத்திரி நவீரதன் அரிய ஆவணச் சேகரிப்புப் பற்றி சிற்றுரையாற்ற, இறுதியில் பிரதம அதிதியின் உரையுடனும், நூலக உதவிப்பதிவாளர் திருமதி. தமயந்தி பெரேராவின் நன்றியுரையுடனும் நிகழ்வு நிறைவுக்கு வந்தது. இவ்விணைந்த பட்டியலாக்கத் தேடலின்மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எவ்வெவ் நூலகங்களில் எவ்வெவ்  ஆவணங்கள் காணப்படுகின்றன எனும் தகவலைப் பெற விரும்புவோர் www.opac.lib.esn.ac.lk எனும் இணையத்தள முகவரியில் பெறமுடியும்.