நாளை காலநிலையில் மாற்றம்

தென்மேற்கு பகுதியில் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை தொடரும். நாளை இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்கு தெற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும். இரத்திரபுரி கேகாலை களுத்துறை மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு சுமார் 75 முதல் 100 மில்லிலீற்றர் மழை பெய்யும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசும். இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கடந்த 27ம் திகதி சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்க ஆரம்பித்தது. இது இன்று வரை தொடரும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் தல்வற்ற, பத்தேகம, தீகல, முல்லட்டியான ஆகிய பகுதிகளில் சூரியன் இன்று நண்பகல் 12.09க்கு நேராக உச்சம் கொடுக்கும். கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மேற்கிலிருந்து தென்மேற்கு பகுதிவரை வீசும் காற்றின் வேகம் 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தை கொண்டதாக இருக்கும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைபிரதேசங்களில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

 

இப்பகுதியில் இடியுடன் கூடிய மழையின் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக காலி , கொழும்பு நுவரெலியா களுத்துறை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பெரும்பாலான காலி நகரத்திற்கான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது