நீரிழிவு நோய்

நீரிழிவு (diabetes) என்பது வள
ர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய்என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2014 இல் கிட்டத்தட்ட 422 மில்லியன் மக்கள் நீரிழுவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்

  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
  • அடிக்கடி தாகம்
  • அதிக பசி
  • மிக வேகமாக எடை குறைதல்
  • அதிகமாக சோர்வடைவது
  • கண்பார்வை மங்குதல்
  • வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
  • திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
  • பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்

    நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்.

    • பார்வை இழப்பு
    • மாரடைப்பு
    • சிறுநீரகக் கோளாறு
    • பக்கவாதம்
    • கால்களை இழத்தல்
    • கோமா மற்றும் இறப்பு

    நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்.

    நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) –லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.

    விழிப்புணர்வு

    சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.