பாண்டிருப்பில் வீடொன்று உடைத்து திருட்டுச் சம்பவம்

பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ம.கருணாநிதி என்பவரது வீடுட்டு முன் கதவு உடைக்கப்பட்டே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை. குறித்த வீட்டார் கடந்த 08 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று மட்டக்களப்பு புன்னச்சோலை காளி கோவிலுக்கு சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கிநின்று விட்டு நேற்று (10) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந் நிலையில் வீட்டு முன் கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதை அவதானித்த வீட்டு உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து விரைந்த பொலிஸார் அம்பாறை குற்றப்பிரிவு பொலிஸாருக்கு அறிவித்தனர். மோப்ப நாய் சகிதம் வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வீட்டின் சுவாமி அறை மற்றும் படுக்கை அறை என்பவற்றிலுள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டு திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். இங்கு 2 பவுண் நகையும் 20 ஆயிரம் ரூபாபணமும் திருடப்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளர் தெரிவித்தார்.

சமீப காலமாக பாண்டிருப்பு கிராமத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தற்போது திருடப்பட்ட வீட்டிற்கு எதிரில் உள்ள வீதியில் கடந்தவாரம் இதே போன்றதொரு திருட்டுச்சம்பவம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.