பாண்டிருப்பு பெரியகுளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

நேற்று (14)வெள்ளிக்கிழமை பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டத்திற்கு அருகிலுள்ள குளத்தின் கரையோரம் சடலம் ஒன்று மிதப்பதை கண்டமக்கள் கல்முனைப் பொலிஸாருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நற்பிட்டிமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆசான் ஹபீபுல்லாஹ்(43வயது) என்பவராவார்.

குறித்த நபர் மாடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாடு மேய்ப்பதற்க்காக வந்தவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனை நீதவான் நீதிபதி ஐ.பி.பாயிஸ்ரசாக் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேதப்பரிசோதனைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.