புத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை இதுதான்! வைரலாகும் புகைப்படம்

பிரித்தானியாவில் இந்த புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் குறித்த குழந்தை சரியாக 00.01 மணியளவில் பிறந்துள்ளது.

35 வயதான பார்தி தேவி மற்றும் அஷ்வானி குமார் ஆகியோருக்கு பிறந்த இந்த குழந்தைக்கு Ellina குமாரி என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். குறித்த குழந்தை பிறந்தபோது 3.08கிலோ எடை இருந்ததாகவும் தற்போது பெருமை பொங்க செவிலியர்களும் பெற்றோர்களும் புத்தாண்டின் புதுவரவான குழந்தையை போட்டி போட்டு கவனித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Handsworth பகுதியில் குடியிருந்து வரும் இந்த தம்பதிகள் நாளை அல்லது அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து தங்கள் குடியிருப்புக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.

நள்ளிரவில் குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லவில்லை எனவும், ஆனால் இந்த புத்தாண்டு தற்போது வாழ்நாளில் மறக்க முடியாத புத்தாண்டாக மாறியுள்ளது எனவும் குறித்த தம்பதிகள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

புலர்ந்த புத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை Ellina குமாரி என தெரிய வந்ததில் அகமகிழும் இந்த குடும்பம், குழந்தை பெரியவளானதும் இந்த நிகழ்வினை கண்டிப்பாக அவளுக்கு சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன் என்றார் பார்தி தேவி.