மட்டக்களப்பில் இலவச முள்ளந்தண்டு மற்றும் கண் சிகிச்சை முகாம்கள்.

கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

முள்ளந்தண்டு உபாதைக்கு உள்ளானவர்களுக்கு விசேட சிகிச்சை முகாமும் கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வாக இது நடாத்தப்பட்டது.

இதன்போது சுமார் 250 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் சுமார் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு முள்ளந்தண்டு உபாதை சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்களை கொழும்புக்கு வருமாறும் கோரப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகைத்தந்த விசேட சிகிச்சை நிபுணர்கள் இதன்போது சிகிச்சைகளை வழங்கியதாக கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளன தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளன தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் முகாமைத்து பணிப்பாளர் ஏ.தியாகராஜா,மட்டு.அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.