மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் தேத்தாத்தீவுக்கும், களுதாவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட பொழுது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

காத்தான்குடி டீன் வீதியைச் சேர்ந்த 2 இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளிலும் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.