சுவாமி விபுலானந்தர்

சைவத்தமிழ் பேராசான்

சுவாமி விபுலாநந்தர்..

(1892-1947)

ங்கம் கண்ட செந்தமிழின் திருநூல்கள் பலவற்றைத் தம் சலியாப் பேருழைப்பால் தந்து மகிழ்ந்த தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர், சேர நாட்டு ஞானச் செல்வர் இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரத்தை முழு உருவத்துடன் முயன்று பதிப்பித்து வெளியிட்ட விழுமிய ஆண்டு 1892.

ஆம்; ஒரு நூற்றாண்டுக்கு முன், நெஞ்சை அள்ளும் சிலம்பின் சிறப்பைத் தமிழர் முழுமையாக அறிந்திலர். முத்தமிழ்த் திறத்தையும் முழுதுணர்த்திய இளங்கோவின் வித்தகக் காப்பியத்தை, முழுமையாகப் பெற்றுச் சுவைத்த தமிழுலகம், பெருமிதம் கொண்டது; பெறற்கரிய பேற்றினை அடைந்ததாய்ப் பெரிதும் மகிழ்ந்தது என்றாலும், அடிகள், தம் காப்பியத்துள் இசைத்தமிழ் நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பகுதியின் இயல்பினை எளிமையாகவும், முழுமையாகவும் அறியாது, சற்றே அயர்ந்து மயங்கவும் செய்தது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அறிஞர் பெருமான் அடியார்க்கு நல்லார் வாழ்ந்த காலத்திலேயே,பழமையான இசை, நாடகத் தமிழ் நூல்கள் பல, வழக்கற்று மறைந்துபோன அவல நிலையை, அப் பெருமானின் உரைப்பாயிரத்தால் அறிகிறோம்.

இத்தகைய நிலையில், இடர்ப்பாடின்றிச் சிலப்பதிகாரத்தைப் பயில்வோர் அனைவரும், இசைப் பகுதிகளைச் சற்றே கடந்து கற்பது வழக்கமாக இருந்தது; இன்னும் சொல்லப் போனால், பல்கலைக் கழகத்தார் சிலப்பதிகாரத்தைப் பாடமாக அமைக்கும் போது, அரங்கேற்றுக் காதையை அப்பால் நீக்கிப் பாடத்திட்டத்தை வகுத்து வழங்குவது பழக்கமாகவும் நின்றது.

இந்நிலையினை ஆழ்ந்து எண்ணிப் பார்த்து, அகத்துள் கவலை கொண்டது ஒரு தமிழ் உள்ளம்! ‘முடிச்சினை’ அவிழ்த்து, முடங்கிக் கிடக்கும் பொருளினைத் தெளிவுபடுத்த,அந்தத் தமிழுள்ள்ள அடிகோலியது; ஆராய்ந்தறியப் பேரார்வம் கொண்டது. ஓராண்டா? ஈராண்டா? தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள்! வேட்கையுடனும், வீறுகொண்ட பேராற்றலுடனும், ஓய்வின்றி, உறக்கமின்றி, மெய்வருத்தம் பாராது, வேறு பணிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளி; நாளும் பொழுதும் உழைத்து, உள்ளாய்ந்து, இசை நூல் பொருள்களை எல்லாம் அறியுமாறும், புரியுமாறும் விளங்கவைக்கும் ‘இசைத்தமிழ் ஞானக்கதிரை’ ஏற்றி வைத்தது அந்தத் தமிழ் பேருள்ளம்!

பேருள்ளத்தை உடைமையாகப் பெற்ற பெரியார், சுவாமி விபுலாநந்தர்!

அப்பெரியார் ஏற்றி வைத்த ஞானக்கதிர் – யாழ் நூல்.

யாழ் நூல் அரங்கேறிய ஆண்டு – 1947.

அரங்கேற்றத்தில் பங்கேற்று, நூலின் அருமையுணர்ந்து போற்றிப் பாராட்டியோர்: இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர்.

அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் யாழ் நூலின் கணக்குப்படி அமைந்த பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்கள், முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை, ‘நரம்பின் மறை’ எனத் தொல்காப்பியரும், ‘இசையோடு சிவணிய யாழின் நூல்’ எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்ட யாழ் நூற்பொருள் இருந்த இடமும் தடமும் தெரியாது மறைந்தொழிந்த நாளில், பெரும் புலமையால், பேராற்றல் மிக்க ஆய்வுத் திறத்தால், பெற்றிருந்த இசை நுணுக்கத்தால், பழந்தமிழ் யாழ்க் கருவியினை மீண்டும் உருவாக்கிப் பண்டையோர் வளர்த்த இசை நலங்களையெல்லாம் கேட்டு மகிழுதற்குரிய இசைத்தமிழ் முதல் நூலாக ‘யாழ் நூல்’ உருவாக்கித் ‘தமிழ்ப் பெருங்கொடை’யாக வழங்கினார் சுவாமி விபுலாநந்தர். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட சுவாமிகளின் யாழ் நூல், ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது. சுவாமி விபுலாநந்தரின் செயற்கரிய தமிழ்த் தொண்டு, தமிழறிஞர்களின் பாராட்டிதலையும் போற்றுதலையும் பெற்றுத் தனிப்புகழ் பெற்றது.

தேசப் பற்றும், தெய்விகப் பற்றும் கொண்டிருந்த சுவாமிகள், மகாகவி பாரதியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ‘பாரதியின் எழுத்துகள் மனித நேயத்திற்கு வழிகாட்டும் கைகாட்டிகள்’ என்றும், ‘பாரதியின் கருத்துகள், இந்திய நாட்டின் மலர்ச்சிக்கு ஒளியூட்டும் கதிர்ச் சுடர்கள்’ என்றும், ‘பாரதியின் எண்ணங்கள்’, தமிழ் மொழிக்குப் புதிய வண்ணங்கள் தீட்டிய தூரிகைகள்’ என்றும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் பாரதி பற்றிய தம் கணிப்பை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். மகாகவி பாரதியின் பாடல்கல்லி இழையோடும் இனிமையும், எளிமையும் விபுலாநந்தரின் பல செய்யுள்களில் மலர்ச்சி பெற்று, மணங்கமழும் தாக்கத்தைக் காணலாம். எடுத்துக்காட்டாக, க்டவுள் வணக்கப் பாடலொன்றைச் சுவாமிகள் இயற்றியுள்ள இயல்பினைப் பார்த்தால், படித்தால் தெளிவு பெறலாம்.

“வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!”

மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த சுவாமிகள், அரசாங்க அடக்கு முறைக்கு அச்சப்படாது, தமிழ் நாட்டில் நிகழ்ந்த பாரதி விழாக்களுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார்.

கிழக்கு இலங்கையில், வாழையடி வாழையென வந்த பழங்குடி மரபில், காரை தீவின் காரேறு மூதூர், இசைத்தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தரைப் பெற்றெடுத்த பெருமை பெற்றது. சாமித்தம்பியார் வேளாளர் குடியில் விளங்கு புகழ் பெற்ற நல்ல மனிதராய்க் கண்ணம்மை எனும் வாழ்க்கைத் துணையுடன் நடத்திய குடும்ப வாழ்வில், அக்குலம் சிறக்க விபுலாநந்தர் தோன்றினார். ஆண்டு 1892 – அந்த ஆண்டிலே தான் சிலப்பதிகாரத்தை, உ.வே.சா.வின் உயரிய உழைப்பால், தமிழ்ச் சமுதாயம் முழுமையாகக் கண்டு களித்தது. பின்னொரு காலத்தில், சிலம்பின் இசைத்தமிழ் நுட்பத்தை எடுத்தியம்பவுள்ள பெருமகனையும் அதே ஆண்டு பிறப்பித்துச் சிறந்தது.

சாமித் தம்பியார் தம் புதல்வனுக்கு ‘மயில்வாகனன்’ எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். பள்ளிப் பருவம் அடைந்ததும் மயில்வாகனன், குஞ்சித் தம்பி எனும் ஆசானிடம் பாடங் கேட்டதோடு, தந்தையாரிடமும் தாய் மாமன் வசந்தரா பிள்ளையிடமும் கற்கும் வாய்ப்புப் பெற்றான். காரை தீவின் பிள்ளையார் கோயிலில் பட்டகையராப் பணியாற்றி வந்த வைத்தியலிங்க தேசிகர், தமிழ் மொழியுடன் வடமொழியறிவும் பெற்று விளங்கியதை அறிந்த சாமித் தம்பியார், மயில்வாகனன் அப்பெருந்தகையிடம் பயில்வதற்கு அனுப்பினார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை, தேசிகரிடம் தெளிவுறக் கற்ற மயில்வாகனன், செய்யுள் இயற்றும் திறத்தைத் தம் பன்னிரண்டாம் வயதிலேயே பெற்றிருந்தான். மயில்வாகனன் தனது கல்விக்கு வித்திட்ட தன் ஆசிரியர் குஞ்சித்தம்பி அவர்களை தனது செய்யுள் திறத்தினால் வாழ்த்தினார்:

“அம்புவியிற் செந்தமிழோ

டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி

வம்பு செறி வெண்கமல

வல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத்

தம்பியென்னும் பெயருடையோன்

தண்டமிழின் கரைகண்த தகமையோன்றன்

செம்பதும மலர்ப்பதத்தைச்

சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே”

அக்காலத்தில் சென் மைக்கல் கல்லூரியில் அதிபராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வண பொனெல் என்பவராவர். இவர் கணித பாடத்தைப் போதிப்பதில் ஆற்றல் மிகுந்தவர். மயில்வாகனனாரின் கணித திறமைக்கு வித்திட்டவர் இக் குருவானவர். இக்கல்லூரியில் இருந்து பதினாறாவது வயதில் கேம்ப்றிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதன்மையாகத் தேறினார். தாம் கற்ற கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பின்னர் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியராக இருந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெறுவதற்காக 1911ஆம் ஆண்டு கொழும்பு வந்தார். 1912ஆம் ஆண்டு ப்யிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.

மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மட்டுமன்றி விஞ்ஞானத் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்ட மயில்வாகனனார் பின்னிற்கவில்லை. 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.

இளமையிலேயே இறை பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த மயில்வாகனன் தம் கிராமத்திலிருந்த கண்ணகி கோயிலுக்கு நாளும் சென்று வழிபாடு செய்து வந்தார். அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் இலங்கையிலேயே முதன் முதலில் பங்கு பற்றி, முதன்மைத் தகுதி பெற்றார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்’, சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், இலங்கைக்கு சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் ‘திறவுத் தூய்மை’ எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

ஆங்கிலப் பள்ளியில் விஞ்ஞான அறிவு பெற்றிருந்த மயில்வாகனன் 1920-ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன்.

‘பிரபோத சைதன்யா’ எனும் தீட்ஷா நாமத்தைப் பெற்று, 1924 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் ஞான உபதேசம் அருள ‘சுவாமி விபுலாநந்தர்’ என்ற திருப் பெயர் பெற்றார் மயில்வாகனன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திறமும் உரமும் பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர் ‘ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்’ எனும் தமிழ் இதழுக்கும், ‘வேதாந்த கேசரி’ எனும் ஆங்கிலத் திங்கள் வெளியீட்டிற்கும் ஆசிரியர் ஆனார். சுவாமிகளின் பேரறிவுத் திறத்தையும், பெருங்கருணை இயல்பினையும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நடத்தி வந்த பள்ளிகளை எல்லாம் சீரோடும் சிறப்போடும் நிர்வகித்து வந்த விபுலாநந்தர், மட்டக்களப்பில் ஆங்கில அறிவியல் கல்வியைப் போதிக்க 1929-ம் ஆண்டில் சிவானந்த வித்தியாலயத்தை நிறுவினார். யாழ்ப்பாணம் ‘ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் என்றோர் அமைப்பைத் தொடங்கி வைத்து, பிரவேஷாசப் பண்டிதத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளை ஏற்படுத்தி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தக்க நெறிகளை வகுத்தளித்தார்.

செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றுடன் இலத்தீன், யவனம், வங்கம், சிங்களம், அரபி முதலாய பன் மொழிப் புலமை பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர், ‘ஆங்கிலவாணி’, ‘விவேகானந்த ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ஞானயோகம்’ முதலிய பல மொழி பெயர்ப்பு நூல்களை ஸ்ரீ இராமகிருஷ்ண மடாலயத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் நடைபெற்ற தேசிய தெய்வீக மொழியுணர்வு தழைத்துச் செழிக்கத் தம் உரையாற்றலை உரமாக்கினார் சுவாமிகள்.

‘பிரபுத்த பாரத’ எனும் இதழிற்கு ஆசிரியரான சுவாமிகள், இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.

யாழ்நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய சுவாமிகள், கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் (19/07/1947) சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்

இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்

ழத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் சேர்த்த வளம் குறித்துத் தனியாக பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு, குறிப்பாக இசைத் தமிழுக்கு தனது “யாழ் நூல்’ என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். யாழ் நூல் தவிர மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த உன்னதமான துறவிகளில் ஒருவர். ஆன்மிகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமகன்.

அவர் இலங்கை மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி-கண்ணம்மை தம்பதிக்கு 1892-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங்களில் ஒன்றான மயில்வாகனன் என்ற பெயரிட்டு வளர்த்தனர்.அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும் வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக நன்னூல், சூளாமணி நிகண்டு உள்ளிட்டவற்றையும் குறளையும் ஆழ்ந்து கற்றார்.

அவரது ஆழ்ந்த ஆன்மிக உணர்வுக்கான அடித்தளம் அவர் மாமன்களான சிவகுருநாதப் பிள்ளை மற்றும் வரதராசப் பிள்ளை ஆகியோரால் இடப்பட்டது. இவர்களிடம் கந்தபுராணம் மற்றும் பாகவதம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே மயில்வாகனன் கற்றார்.

கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28-வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.

கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே கைலாச பிள்ளை, கந்தையா பிள்ளை உள்ளிட்ட சில முக்கியத் தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால் அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின் வித்துவான் தேர்விலும் வென்றார்.

தமிழோடு ஆன்மிகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம் கொழும்பிலிருந்த ராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மையும்தான்.

1922-ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான வேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார்.

1924-ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார்.

1925-ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931-ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கு வந்த புதிதில் அவரை ஒரு கூட்டத்தில் பேச வைத்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் விபுலானந்தஜி பேசுவார் என்று போட்டிருப்பதைப் பார்த்து யாரோ வடநாட்டு சன்யாசி உரை நிகழ்த்துகிறார் என்று நினைத்தவர்கள் கம்பீரமான தீந்தமிழில் விபுலானந்தரின் முழக்கத்தைக் கேட்டு வியந்தனர்.

இமயமலை யாத்திரை, பிரபுத்த பாரதம் என்ற வேதாந்த இதழின் ஆசிரியர் என இவரது ஆன்மிகப் பணிகளும் ஓசையின்றி நடந்தது வந்தன. விவேகானந்த ஞானதீபம் உள்ளிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் இவரது ஆன்மிகப் பணியில் அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரியத்திலும் சிறப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்த விபுலானந்தர், மகாகவி பாரதியிடத்திலும் மனத்தைப் பறி கொடுத்தார். மூத்த தமிழ் அறிஞர்கள் பாரதியைக் கண்டு கொள்ளாமலிருந்த அந்தக் காலத்தில் பாரதியின் படைப்புகளில் ஈடுபட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அடிகளார்.

தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934-ல் உருவான “சொல்லாக்கக் கழக’த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.

இசைத் தமிழ் குறித்து கிட்டத்தட்ட தனது 14 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக மிக முக்கிய இசைத் தமிழ் நூலான யாழ்நூலை விபுலானந்தர் படைத்தார்.

சிலப்பதிகாரத்தில் உள்ள ஏராளமான அரிய இசைச் செய்திகள் குறித்து போதிய அளவுக்கு விரிவான ஆழமான விளக்கங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் சிலம்பின் இசை நுட்பங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை விபுலானந்தரின் யாழ்நூலுக்கு உண்டு. இதன் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் ஆழத்தையும் அவர் நிறுவினார். சிலம்பிலுள்ள இசைத் தகவல்களின் ஆழத்தில் முக்குளிக்கப் போதிய இசைப் புலமை வேண்டும். அதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணிபுரிந்த இசை மேதை பொன்னையாப் பிள்ளை உள்ளிட்ட சிலரிடம் இசை இலக்கண நுட்பங்களையெல்லாம் அறிந்தார் விபுலானந்தர்.

பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என 7 இயல்களால் ஆனது இந்த நூல். நாடக இலக்கணங்களை வகுத்துக் கூறும் மதங்க சூளாமணி, விபுலானந்தரின் மற்றோர் அரியபடைப்பு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழாவின் போது “ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்’ என்ற தலைப்பில் அங்கு விபுலானந்தர் உரை நிகழ்த்தினார். இந்த உரை விழாவுக்கு வந்திருந்த உ.வே.சாமிநாதய்யரால் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னாளில் இந்த உரையையே மதங்க சூளாமணி என 3 இயல்களால் ஆன நூலாக விபுலானந்தர் படைத்தார்.

இவரது புகழ் பெற்ற “யாழ் நூல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்தபின் ஜூலை மாதமே விபுலானந்தர் காலமானார். வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

நன்றி: தமிழ்மணி (தினமணி) – 8 பெப்ரவரி 2009
எழுதியவர்: தேசிகன்

பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை

 
 

வள்ளுவப் பேராசானில் தொடங்கி, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரை இசைக்கும் இசைக் கருவிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்த இசைக் கருவிகளில் மிகவும் அதிகமாக இடம்பெறுவது “யாழ்’ என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆமாம், இந்த “யாழ்’ எப்படி இருக்கும்? வீணைபோல இருக்குமோ?

பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனை.

ஒப்பனை செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் புலவர். அவருக்கு யாழின் ஒவ்வொரு பகுதியும் எப்படித் தெரிகிறதாம் தெரியுமா?

யாழின் மண்குடம் போன்று அமைந்த பகுதிக்கு பத்தல் என்று பெயர். இந்தப் பத்தலுக்கு, மானின் குளம்பு பதித்த அலகுகளை உவமை கூறலாம் என்கிறார். அந்தப் பத்தலின்மேல் போர்த்தப்பட்டிருக்கும் தோலின் நிறத்திற்கு விளக்கின் சுடர் உவமை கூறப்பட்டிருக்கிறது. இரண்டு புறமும் அமைந்த இந்தப் பத்தல் பகுதிகளை இணைத்துப் பொதித்திருக்கிறது தோல். அந்தத் தோலின் வாய்ப் புறங்கள் மேற்பக்கத்தில் கூட்டித் தைக்கப்பட்டுள்ளன. அந்தத் தையல் போடப்பட்ட இடமானது, சிவந்த நிறமுள்ள இளம் பெண்ணின் இளஞ்சூல் அமைந்த வயிற்றின் கீழே மெலிதான ஒழுங்குபட்ட ரோமங்கள் நீண்ட கோடாய் அமைந்ததுபோலத் தெரிகிறது புலவருக்கு.

பத்தலின் பகுதிகள் நெகிழாமல் இணைந்திருப்பதற்கு அவை ஆணிகளால் முடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆணிகள் வலையில் வாழும் நண்டுகளின் கண்களை நினைவு படுத்துகிறதாம். பத்தலின் உட்புறம், வீணையில் உள்ளது போலவே குடைந்தெடுக்கப்பட்டிருக்கும். அதன் தண்டு சார்ந்த மேற்பகுதியும் அரை வட்டமாகக் குடைந்தெடுக்கப்பட்டிருக்கும். அது எப்படித் தோன்றுகிறது என்றால், அமாவாசை கழிந்த எட்டாம் நாளில் தோன்றும் அரை வெண்ணிலா போல இருக்கிறதாம். பொத்தலுற்ற தோலின் உட்புறத்தே அது இருப்பது, உள் நாக்கு இல்லாத வெற்றிடமாகக் காட்சி அளிக்கிறது என்கிறார் புலவர்.

பத்தலோடு பொருத்தப் பெற்றுள்ள கரிய தண்டு, கருமை நிறமுள்ள பாம்பு தலை நிமிர்த்தி இருப்பதுபோலக் காட்சி அளிக்கிறது. அந்தக் கரிய தண்டில் சுற்றப்பட்டுள்ள வார்க் கட்டுகள் கருமையான நிறமுடைய பெண் ஒருத்தி அணிந்த வளையல்கள் போலக் காட்சி அளிக்கின்றனவாம்.

பொருத்தமான நரம்புகள் அந்த வார்க் கட்டுகளோடு பத்தலில் தொடுக்கப்பட்டுள்ளன. அது, திணையரிசியைக் குத்தி, ஆய்ந்த அரிசியில் இருந்து வேண்டாதன நீக்கிப் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளன போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்புகள் என்கிறார் புலவர்.

குற்றம் குறையே இல்லாமல் யாழின் அனைத்துப் பாகங்களையும் சரி செய்தால்தான் அந்த யாழை மீட்டும் கலைஞனால் நல்ல இசையை வெளிப்படுத்த முடியும். அது, மணப்பெண்ணுக்கு சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், நகை அலங்காரம் எல்லாம் செய்த பின்னும் மேடைக்கு அனுப்புவதற்கு முன்னால் மீண்டும் ஒப்பனை செய்து அழகு பார்ப்பதற்கு ஒப்பானது என்கிறார் புலவர்.

இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் யார்? வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்.

பொருநராற்றுப் படையில் காணப்படும் அற்புதமான பாடல் இது:

குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல்

விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை

எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ் வயிற்று

ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;

அளைவாழ் அலவன் கண் கண்டன்ன,

துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி;

எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி

அண் நா இல்லா அமைவரு வறுவாய்;

பாம்பு அணந்தன்ன ஓங்கு இது மருப்பின்;

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;

கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவளின்

ஆய் திணை யரிசி அவையல் அன்ன

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்

கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;

மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,

அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;

ஆறு அலை கள்வர் படை விட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை

நன்றி: தினமணி (இந்த வாரம் கலாரசிகன், ஜூன் 21, 2009)

தமிழிசை இயக்கமும் விபுலானந்தரும்

“தமிழிசை இயக்கம் தூய கலை இயக்கமே. அதில் அரசியல் கலப்பே இல்லை. ஜாதிப் பித்தரும் இதில் இல்லை. சமஸ்கிருதத்தையோ, தெலுங்கையோ, நாம் வெறுக்கவில்லை. மற்ற மொழியார் தமது தாய்மொழிப் பாட்டைப் போற்றுவது போலத் தமிழர் தமிழ்ப் பாடல்களைப் போற்ற வேண்டும் என்கிறோம்” என்று ‘அண்ணாமலை அரசர்’ தமது தமிழிசை வளர்ப்புக்கு விளக்கம் தந்துள்ளார். ராஜாஜியோ, கல்கியோ எவ்விடத்தும் தமிழிசை இயக்கம் என்ற தொடரை தமது பேச்சில், எழுத்தில் கையாளவில்லை. மாறாகத் ‘தமிழ்ப்பாட்டு இயக்கம்’ என்றே எழுதுகிறார்கள். இதில் தமிழிசை, தமிழ்ப்பண் போன்ற உள்ளார்ந்த பொருள்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கான சான்றுகளை அவர்களது எழுத்தில் காண முடியவில்லை. கர்நாடக இசை மரபு வழிப்பட்ட, தமிழ்ப் பாட்டுக்கள் தேவை என்பதே இவர்களது நோக்கம். அதாவது ‘திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்கள்’ ஆங்கில மோகிகளாக இருக்கும் தன்மையோடு அவர்களது தமிழ்ப் பற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையில் கர்நாடக இசை சார்ந்த தமிழ்ப் பாட்டுக்களை இவர் விரும்பியபடி நாம் புரிந்து கொள்வது அவசியம். இவர்கள் யாருக்கும் விபுலானந்தர் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தினார் என்று அறிய முடியவில்லை. 1933-இல் தமது வீட்டில் தேஈசியக்கொடி ஏற்றி அந்த ஆண்டே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியப் பணியை விட வேண்டிய அவசியம் ஏற்பட்ட விபுலானந்தர், 1941-இல் நடந்த முதல் தமிழிசை மாநாட்டில் மிகப் பெரும் சிம்மாசனத்தில் இருக்க வேண்டிய விபுலானந்தர், இலங்கை செல்ல வேண்டிய சூழலும், 1934 தொடங்கிய இசை ஆய்வில் தனி மனிதராக ஈடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுப் போனதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

1926-இல் இவரது ‘மதங்க சூளாமணி’ ஆய்வும், 1936-இல் சென்னைப் பல்கலை ஆய்வும் தமிழிசை மற்றும் கலை தொடர்பான ஆழமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினாலும், அது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் இவரது பங்களிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை.

இங்கு வெற்று அரசியல் கோஷம் மற்றும் காலந்தோறும் ஆளும் வர்க்கமே கலைகளைக் கட்டிக் காக்கிறது என்பது போன்ற ‘புரவலர் போற்றும்’ பண்பாட்டுக்களம் அரசர்களுக்குத் தேவை. இருபதாம் நூற்றாண்டு அரசருக்கு இவ்வகையில் தமிழ்ப்பாட்டு தேவைப்பட்டது. இதனை வேறு வகையில் புரிந்து கொள்ள, மேல்சாதி, மேல் வர்க்க பண்பாட்டு நிகழ்வுகளில், அவர்களுக்குள்ள முரண்பாடுகளே இவை. உண்மையான கோட்பாட்டு ரீதியான தமிழியல் தொடர்பான ஆய்வுப் போக்காகக் கண்டு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது. இதனை உறுதிப்படுத்த விபுலானந்தர் பற்றிய இவ் அமைப்புகளின் ‘கவனிப்புகளை’ நல்ல எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.

1930 மே மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இசைச் கச்சேரி நடைபெற்றது. அதில் பார்ப்பனர் அல்லாதார் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவித்தார். அவருக்குத் தமிழிசை என்ற கோட்பாட்டுக் கருத்தாக்கத்தில் அக்கறை இருந்ததாக அறிய இயலவில்லை. மாறாகப் பாடுபவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் ‘தமிழ்ப் பாட்டு’ கேட்பவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதாவது, தமிழ்ப் பாட்டுக்களை இசை அரங்குகளில் பாட வேண்டும் என்பவர்களிலிருந்து தமிழ்ப் பாட்டுக்களைப் பார்ப்பனர் அல்லாதவர் பாட வேண்டும் என்ற கருத்தாக்கம் கொண்டிருந்தார்.

எனவே, மேற்குறித்த தமிழிசை மற்றும் தமிழ்ப்பாட்டு தொடர்பான தமிழகத் தமிழிசை வரலாற்றில், தமிழிசைக்கென கோட்பாட்டு உருவாக்கத்தை இந்திய தேசியத்தை ஏற்றுக் கொள்ளும், ஆரிய திராவிட பாஷா சங்கத்தை உருவாக்கி வளர்க்க விபுலானந்தர் முயன்றார்.

சிலப்பதிகாரத்தில் இங்கு, இவர் கருணாமிர்த சாகர கர்நாடக இசை வழிப்பட்ட அணுகுமுறைகளில் வேறுபடுகிறார். எனவே அவர் வழிப்பட்ட ஆய்வுப் போக்குகளில், விபுலானந்தர் முன்னெடுக்கப்படவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கருணாமிர்த சாகரம் வழிபட்ட ‘புதிய ராகங்கள்’ அவரது பரம்பரையினராக ஆய்வு செய்யப்பட்டு வெளிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விபுலானந்தரால் உருவாக்கப்பட்ட வெள்ளைவாரணர் போன்ற அவரது மாணாக்கர்களும் விபுலானந்தர் மேலும் தொடர விரும்பிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

தேசியவாதிகள், சுயமரியாதை இயக்கத்தவர்கள் இவர்களின் அணுகுமுறைகளிலிருந்து பல வகைகளில் மாறுபட்ட விபுலானந்தர் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வெற்று ஆரவார அரசியல்வாதிகளுக்குக் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை தேவையில்லைதான்.

‘1946-களில் செம்மங்குடி தமிழ்ப் பாட்டுப் பாடியதோடு தமிழிசை இயக்கம் முடிவுற்றது’ என்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றை இங்கு நாம் நினைவுபடுத்துவது அவசியம்.

1947-இல் விபுலானந்தரின் இசைத் தமிழ் நூல் வெளியிட்ட பின்பு, 1941 முதல் தமிழ்ப் பாட்டுக் கச்சேரி நடத்திய அண்ணாமலை மன்றம் 1909 முதல் பின் ஆராய்ச்சியும் தொடங்கியது. அதில் பெ. தூரன் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவ் ஆராய்ச்சி தொடர்பான அவரது கட்டுரையில் விபுலானந்தரை நினைவுகூர்கிறார். இங்கும் வடமொழி / தமிழ் என்ற இரு திசைகளில் – தமிழிசை ஆராய்ச்சியை பெ. தூரன் முன்னிறுத்துகிறார். விபுலானந்தர் இவ்வகை அணுகுமுறையின்றி, வரலாற்று வளர்ச்சியில் இரண்டு இசை மரபுகளின் இணைப்புகளில், உருவான இசையை முன்னெடுப்பதைக் கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டது.

மேற்குறித்த எவ்வகை அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட விபுலானந்தர் ‘தமிழுக்கென்று தனியான இசை மரபு உண்டென்று உறுதிப்படுத்திய கோட்பாட்டாளர்’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரது அணுகுமுறை வட மொழிக்கோ, பார்ப்பனர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ தியாகய்யருக்கோ எதிர்நிலை எடுக்கவில்லை. மாறாக அவற்றின் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளைக் கவனத்தில் கொண்ட ஆய்வாளராக, உண்மையான தமிழிசைத் தேடலின் மூலவராக அறியப்படுகிறார்.

இன்றைய இயங்கியல் போக்கிலான தமிழியல் ஆய்வுக்கு வளம் சேர்த்த / சேர்க்கும் பேராசிரியர்கள் கைலாசபதி / சிவத்தம்பி ஆகியோரின் அணுகுமுறையும், பேராசிரியர்கள் தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளையின்அணுகுமுறையோடும் ஒரு தளத்தில் விபுலானந்தர் இணைந்து வருகிறார். இவரது ஆய்வு நேர்மை, தத்துவம் மற்றும் அரசியல் அடிப்படையற்ற தமிழகப் பண்பாட்டு இயக்கங்களால் கவனத்தில் கொள்ளப்படாமை ஆச்சரியமன்று.

நன்றி: ஆறாம்திணை, இணையத் தமிழிதழ் 2007-09-26

விபுலாநந்தர்: காக்கியும் காவியும்!

“நீ எனக்கு எழுதும் கடிதங்களில் கண்ணம்மை என்று கையெழுத்திடா விட்டால் உனக்குப் பதில் அனுப்ப மாட்டேன். நான் உன்னை என் அம்மாவாகக் காண்கின்றேன் என்று சுவாமி விபுலாநந்தர் எனக்குச் சொல்வார். என்மேல் சுவாமிக்கு அத்தனை பாசம். எனது சொந்தப் பெயர் என்னவென்று அநேகமாக யாருக்கும் தெரியாது. கண்ணம்மை என்றுதான் என்னை எல்லோரும் அறிவார்கள். அது எனக்கு சுவாமி வைத்த பெயர்’ என்கிறார் கண்ணம்மை என்கிற கோமதகவல்லி!

கண்ணம்மை – சுவாமி விபுலாநந்தரின் மருமகள். குடும்பத்தில் மூத்த பிள்ளை விபுலாநந்தர். அவருக்கு இரண்டு பெண் சகோதரிகள். இரண்டாவது சகோதரியின் மகள்தான் கண்ணம்மை.

கண்ணம்மை ஓய்வுபெற்ற அதிபர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வசிக்கின்றார். 85 வயது தாண்டிய நிலையிலும் மிகவும் ஞாபக சக்தியுடன் தெளிவாகப் பேசுகின்றார். பாடசாலைக் காலத்து நினைவுகளையும், விபுலாநந்தர் பற்றிய ஞாபகங்களையும் மிகத் துல்லியமாக மீட்கிறார்.

விபுலாநந்தர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் பிறந்தவர். அவரின் தந்தை பெயர் சாமித்தம்பி, தாயாரின் பெயர் கண்ணம்மை.

விபுலாநந்தர் தன்னுடைய தாயாரை மிகவும் நேசித்திருக்கின்றார். அந்த நேசம் அலாதியானது. தன்னுடைய தாயார் பற்றி சுவாமி விபுலாநந்தர் தனது கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகின்றார். ‘என்னுடைய அம்மாவைப் போல உலகத்திலே இன்னுமொருவரைக் காணவில்லை. பார்வைக்கு அழகாக தெய்வம் போல் இருந்தார்கள். என்னை ஒரு பொழுதாவது கடிந்து பேசியது கிடையாது. அப்பா தடியினால் அடித்தாலும் எதிர்த்து நிற்பேன். அம்மா ஒரு வார்த்தை சொன்னால் அதைத் தலை மேற்கொண்டு நடப்பேன்…!’

இதனால்தான், தனது அம்மாவின் மறைவுக்குப் பின்னர் – அவரின் மீதான நேசம் காரணமாக, தன்னுடைய மருமகளுக்கு அம்மாவுடைய ‘கண்ணம்மை’ எனும் பெயரை வைத்து, மருமகளில் அம்மாவைக் காண முயற்சித்திருக்கின்றார் விபுலாநந்தர்.

மயில்வாகனம் என்கிற மனிதர் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்திருக்க மாட்டீர்கள். அதேவேளை சுவாமி விபுலாநந்தர் பற்றி நிறையவே அறிந்திருப்பீர்கள். இரண்டு பெயர்களுக்கும் சொந்தக்காரர் ஒருவர்தான்!

1924ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமியில் காவியுடை தரித்து, சுவாமி விபுலாநந்தர் எனும் நாமம் பெற்ற அந்த மனிதனுக்கு ஆயிரமாயிரம் பக்கங்களும், முகங்களும் இருக்கின்றன.

சுவாமி விபுலாநந்தரை ஒரு சாதுவான துறவியாகவே நம்மில் அநேகர் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், அவர் ஒரு இராணுவ வீரன் என்றால் நம்புவீர்களா?

‘முதலாவது உலக யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. 1914ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். சுவாமிகள் கண்டியில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் காலியில் கடமையாற்றினார்’ என்று கூறும் விபுலாநந்தரின் மருமகள் கண்ணம்மை, இராணுவ உடையில் துப்பாக்கியுடன் விறைத்து நிற்கும் விபுலாநந்தரின் படமொன்றை நம்மிடம் காட்டினார்.

விபுலாநந்தர் பிறவிப் புத்திஜீவி! அவருக்கு எல்லாக் கலைகளும் வசப்பட்டிருக்கின்றன. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராகக் கடமையாற்றி இருக்கின்றார். அதுபோலவே விஞ்ஞானத்துறையிலும் பி.எஸ்.சி. பட்டம் பெற்றுள்ளார். பன்மொழிப் புலமை பெற்றவர். இசை, நாடகத்துறைகளில் ஆழமான அறிவு கொண்டவர். அதற்கு அவருடைய யாழ் நூல் மற்றும் மதங்க சூளாமணி போன்ற பல நூல்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.

விபுலாநந்தர் – பன்முகம் கொண்டதொரு வைரம். அவர் எல்லாத்துறைகளையும் வசப்படுத்தியிருந்தார். அவரிடம் – எல்லாத்துறைகளும் வசப்பட்டிருந்தன.

1892ஆம் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் செயலும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. ‘நாட்டு மரக்கறிகளில் சுவாமிக்கு நல்ல விருப்பம். வல்லாரையை மிகவும் விரும்பி உண்பார். மற்றவர்களையும் அதைச் சாப்பிடுமாறு உற்சாகப்படுத்துவார். இப்போது நாம் பயன்படுத்தும் ‘லன்ச் பொக்ஸ்’ போல், வாழை இலையால் செய்த பெட்டியில்தான் அவருடைய உணவை வைத்துச் சாப்பிடுவார்’ என்று – தன்னுடைய மாமா, விபுலாநந்தரின் உணவுப் பழக்கவழக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கண்ணம்மை!

விபுலாநந்தரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவரை ‘சுவாமி’ என்றுதான் கண்ணம்மை விழித்தார். ‘சுவாமியை நீங்கள் மாமா என்று அழைக்க மாட்டீர்களா அம்மா’ என்று கண்ணம்மை அம்மையாரிடம் கேட்டோம். ‘இல்லை. ஒருபோதும் நான் – அவ்வாறு அழைத்தது கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் போதும், சுவாமி என்றுதான் அவரை அழைப்பேன்’ என்றார்.

விபுலாநந்தரும், – அவர் எழுதும் கடிதங்களில் ‘விபுலாநந்த சுவாமி’ என்றே கையொப்பமிட்டிருக்கின்றார்.

யாழ் நூலில் வரும் பாடலொன்றை சுவாமியின் விருப்பத்துக்கிணங்க மனனம் செய்து நான் பாடிக் காட்டியதற்காக, அவர் எனக்கு வீணையொன்றினைப் பரிசளித்தார். அந்த வீணை இப்போதும் மட்டக்களப்பிலுள்ள விபுலானந்தர் இசைக் கல்லூரியில் இருக்கிறது. அதை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கி விட்டேன் என்று கண்ணம்மை கூறுகின்றார்.

விபுலாநந்தரைப் பற்றிய ஆயிரமாயிரம் கதைகள் அவருடைய மருமகள் கண்ணம்மையிடம் இருக்கின்றன. அந்தக் கதைகள் நாம் அறியாதவை. நமக்குப் புதிதானவை. விபுலாநந்த சுவாமியை நேரடியாகக் கண்டவர்கள். அவரோடு வாழ்ந்தவர்களில் – அநேகர் இப்போது இல்லை. அந்த வகையில், சுவாமியின் மருமகள் கண்ணம்மையினை நாம் ஒரு பொக்கிஷமாகவே காண்கின்றோம். அவரிடம் உறைந்து போய்க் கிடக்கும் விபுலாநந்தர் பற்றிய கதைகளை கேட்டு ஆவணப்படுத்த வேண்டும்.

விபுலாநந்தர் என்றவுடன் அநேகமானோருக்குள் ஓர் இந்துத் துறவியின் சித்திரமே மேலெழும்! ஆனால், அது கடந்து அந்த மனிதரைப் பின்பற்றவும், தொட்டுப் பேசவும் எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன.

19 ஜுலை 1947 இல் விபுலாநந்தர் உடலால் மட்டும் மரணித்தார்.

நன்றி: தமிழ்மிரர் – 27 மார்ச் 2011

More Links

-நன்றி-