3வது முறையாக IPL கிண்ணம் வென்றது மும்பாய் இந்தியன்ஸ்

3வது முறையாக IPL கிண்ணம் வென்றது மும்பாய் இந்தியன்ஸ்.

கோடிகள் கொட்டிபுரளும் கிரிக்கெட்டின் கோலாகல திருவிழா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் IPL திருவிழா இன்று நிறைவுக்கு வந்திருக்கின்றது.

IPL இன் மாபெரும் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் பங்கெடுத்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பாய் இந்தியன்ஸ் அணியினர் முதலில் துடுப்பாடியது. எதிர்பார்த்தளவில் இல்லாது வேகமாக ஆரம்ப வீரர்களை மும்பாய் இந்தியன்ஸ் இழந்து வேகமாக பறிகொடுத்தது.

அதன் பின்னர் வந்த வீரர்களும் சரியான ஒத்துழைப்பை வழங்காத நிலையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த மும்பாய் இந்தியன்ஸ் அணி இறுதியில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. குருநால் பாண்டியா 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் தமிழக வீரர் சுந்தர் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுக்க ஜெயதேவ் உனட்கட், ஆடம் சம்பா, டானியல் கிறிஸ்ட்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 129 எனும் இலக்குடன் களமாடிய புனே அணிக்கு ஆரம்ப வீரர் ரஹானே சிறப்பாக விளையாடி 44 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.

முதல் 10 ஓவர்களில் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட புனே அணி, அடுத்த வந்த 5 ஓவர்களில் 25 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது, இதன் காரணத்தால் இறுதி 5 ஓவர்களில் புனே அணியின் வெற்றிக்கு 47 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அனுபவம் வாய்ந்த வீரரான டோனி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்ற ஸ்மித் 51 ஓட்டங்களைப் பெற்று இறுதிப் பந்து பரிமாற்றத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதிப் பந்து பரிமாற்றத்தில் 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பந்து வீசிய ஜோன்சன் முதல் பந்தில் 4 ஓட்டத்தை விட்டுக் கொடுத்தாலும் அடுத்த இரு பந்திலும் புனேயின் நம்பிக்கை வீரர்களான மனோஜ் திவாரி மற்றும் ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்தார்.

முடிவில் வெறுமனே ஒரு ஓட்டத்தால் தோற்றுப் போனது புனே அணி.

இதுவரையான IPL தொடர்களில் ஏற்கனவே 2 கிண்ணங்களை (2013, 2015) வென்ற மும்பை அணி, இன்று தன் 3வது கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

ஆனால் இது மும்பையின் அணித்தலைவர் ரோகித் சர்மாக்கு 4வது ஐபிஎல் கிண்ணம் ஆகும்.

கடந்தமுறை 7 வது இடம் பிடித்த புனே அணி, இம்முறை புதிய தலைவராக ஸ்மித்தை நியமித்தது, அத்தோடு 14 .5 கோடி கொடுத்து இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்சாய் பெற்றுக்கொண்டு இம்முறை IPL கிண்ணம் வெல்ல முயன்றாலும் இறுதிப் போட்டியில் தோற்றுப் போனது.

அடுத்துவரும் 11வது IPL தொடரில் இந்த அணியால் பங்கேற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.